வியாழன், 1 ஏப்ரல், 2021

verkalai vettividatheerkal

 வேர்களை  வெட்டிவிடா திர்கள்


விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறை தான்.

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதை நிலம்தான் !

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

குடும்பத்தின் ஆணிவேராய்
இருப்பதும்  தாய்தானே !!
சற்றே  சிந்தியுங்கள்
பெருமையினை  எடுத்துரையுங்கள் !

ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக