திங்கள், 12 மே, 2014

காதல் அழகே அழகு!





காதல் அழகே அழகு!

பருவ பயணத்தின்
பல்லக்கு, காதல்...
பயணிப்பவன்
பல்லக்கை சுமக்க,
பதவிசமாய் பயணிக்கிறது
காதல்!

சுமப்பவர்களை அது
சும்மா விடுவதில்லை...

தவமெதுவும் இருக்காமல்
தரப்படும் வரம், காதல்!
அதை
தருகிற தேவதை
வருகிற வழி தான்
புரியாத புதிராய்
இன்றும் இருக்கிறது!

இந்த வரம் தரும்
தேவதைகள்
வரத்தை தந்து விட்டு,
கணப் பொழுதில்
காணாமல் போய் விடுகின்றனர்...
தந்து போன வரமோ
வந்து வந்து வதைக்கிறது!

வரம் பெற்றவர்கள்
வாழ்வில்
சுபம் பெற்றவர்கள்!

கண்களை மறைப்பதல்ல
காதல்...
அது, அகக்கண்கள் திறக்கும்
அழகிய சாவி!

தன்னை அறிதலுக்கு
பக்தி மட்டுமல்ல
காதலும் கருவி தான்!

இருவரின்
இதய பரிமாற்றத்திற்கு
தூது போகும் புறா
காதல்!

உடன்படிக்கைகளை
எழுதாமல், எழுதி
கையெழுத்திடாதவர்களையும்
கைதியாக்கி விடுகிறது!

விட்டுக் கொடுத்தலுக்கு
ஒற்றை வார்த்தையில்
ஒரு விளக்கம் தான்
காதல்!

வரம் வாங்கியவர்களில் சிலர்
அதை
செலவழிக்க தெரியாமல்
சிக்கித் தவிக்கின்றனர்!
கணக்கில்லாமல்
வரும் காதல் கூட
ஒரு வகையில்
கறுப்புப் பணம் தான்!

அழகை ஆராதிப்பது மட்டும்
காதல் அல்ல...
காதலே அழகு தான்
அதை ஆராதிக்க
தவமிருக்க வேண்டாம்...
இதயம் திறந்திருக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக