திங்கள், 12 மே, 2014

வாழ்க்கை ஒரு வரம்!



வாழ்க்கை ஒரு வரம்!

அனைவருக்கும்
அளிக்கப்பட்டிருக்கும்
அற்புத வரம்
அவரவரின் வாழ்க்கை!

பிழைக்க வழியில்லையென
பிதற்றுபவன்
உழைப்பை உதாசீனப்படுத்துகிற
உதவாக்கரை!

உழைக்கத் தெரியாதவனுக்கு
என்றும்
பிழைக்கும் வழி தெரிவதில்லை!

வாழ்க்கைச் சுமைகளை
பாரங்களாய் எண்ணி
ஓரமாய் ஒதுங்க நினைப்பவன்
துன்பச் சுமைகளை
தோள்களில் ஏற்றி
தொலை தூரம் சுமக்கிறான்!

வாழ்க்கையை
வரமாய் எண்ணி
வாழ்பவனுக்கு
வறுமைக் காலங்கள் கூட
வசந்த காலங்களாய்
வரவேற்பு கம்பளங்கள் விரிக்கும்

பெருங்காற்றிலும்
அசையாது நிற்கும்
மண்ணின் மலைத்தொடர் போல்
பெருஞ்சோதனைகளிலும்
மனத்திடமே
எதிர்கால மகிழ்ச்சிக்கு
மன்றம் அமைத்து
தென்றல் வீசும்!

விதையை
விருட்சமாக்கும்
வித்தையைக் கற்றுக் கொள்பவனே
வித்தகக் கலைஞனாய்
வியாபிக்கிறான்!

தன்னம்பிக்கையெனும்
மூன்றாம் கையை
தக்க வைத்துக் கொண்டால்
தாராளமாய் வாய்ப்புகள்
தக்க சமயத்தில்
உன் தலைக்கு
மாபெரும்
மகுடம் சூட்டும்!

லட்சியக் கனவுகள்
கலைந்து போகாமல்
லாவகமாய்
அடைகாக்க
கற்றுக் கொள்ளும் போது
நிச்சயமான வெற்றி
நிதமும் உன்னைத் தேடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக