சனி, 10 ஜூன், 2017

உழவன் மகன்




                                         உழவன் மகன்

வெய்யிலின் கொடுமை நிலத்திலே தெரியும்
பயிர் நிலங்கள் வெடித்துப் பாளமாய்த் தெரியும்
இதனைக் கண்ட விவசாயின் மனம் வெதும்பும்
வானின்று மழை பெய்யாதா என ஏங்கும்!
வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்குத் தெரியாது
படித்துப் பட்டம் வாங்கிய விவசாய மகனுக்குப் புரியாது
ஏர்ப் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது
ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில் நடக்காமல் போனது!
படித்தவுடன் வேலையில் சேர்ந்து பெருமைப் படவும்
காசைப் பார்த்தவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழவும்
ஆவல் கொண்டு தனக்கென்று பொன் பொருள் சேர்க்கவும்
தன் மனைவி மக்கள் என்ற வேலி போட்டு வாழ்வதும்
தந்தை உழவனானாலும் தொழிலை மதிக்கத் தெரியவில்லை
அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்துப் பார்க்கவில்லை
நிலம் பாழாய்ப் போனாலும் கவலைப்பட நினைப்பதில்லை
கூறு போட்டு விற்கவும் வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!
இன்றுதான் ஞானம் பிறந்து சற்றே சிந்தித்துப் பார்த்தேன்
உழவுத் தொழில் என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன்
பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய வெட்கம் அடைந்தேன்
நானும் உயர்ந்து உழவு தொழில் செய்யப் புறப்பட்டேன்!
பட்டம் பெற்றாலும் பாட்டாளியாக உழைக்கத் தீர்மானித்தேன்
ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன்
விவசாயம் கற்று என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன்
நானே விவசாயி, கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன்!”

என்று உழவன் மகனொருவன் தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தும் உழவின் மேன்மை அறியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி வருந்தி, மனம் திருந்தி ’மேழிச்செல்வம் கோழைப்படாது’ எனத் தெளிந்து, அத்தொழிலில் ஆர்வத்தோடு இறங்குவதை எளிமையாய்ப் பேசியிருக்கும் இக்கவிதையின் படைப்பாளர் திரு. ரா. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக