ஞாயிறு, 27 மே, 2018

மாற்றம் என்பது...







மாற்றம் என்பது...

முகஸ்துதி செய்வதும்
முழங்காலிட்டு
மண்டியிடுவதும் தான்
இன்று
முதல் மரியாதை
என்றாகி விட்டது!

சொத்துகளை மதிப்பிட்டு
சொந்தங்களை
தீர்மானிப்பது தான்
இன்று, 'சுற்றுச்சூழல்'
என்றாகி விட்டது!

மற்ற வாத நோய்களை விட
மதவாத நோயாளிகளே
மண்டிக்கிடப்பது தான்
இன்று
மதசார்பின்மை
என்றாகி விட்டது!

கை நிறைய சம்பளம்
வாங்கினாலும்
கையூட்டு வாங்குவது தான்
இன்று
கலாசாரம்
என்றாகி விட்டது!

வித்துக்களை வைத்து
விளை நிலங்களை
தீர்மானிப்பது தான்
இன்று
விவசாயப் புரட்சி
என்றாகி விட்டது!

மணல் அள்ளி
மாபியாக்கள் ஆவதுதான்
இன்று
மகத்தான புரட்சி
என்றாகி விட்டது!

குடி கொடுத்து
குடி கெடுத்து
கோலோச்சி வருவது தான்
இன்று
குடிமக்கள் அரசு
என்றாகி விட்டது!

இலவசம் கொடுத்து
எதையும் சாதிக்கலாம்
என்பது தான்
இன்று
எழுதாத விதி
என்றாகி விட்டது!

வாங்கிய பணத்துக்கு
வாக்கைச் செலுத்துவது
என்பது தான்
இன்று
வாக்குத் தவறாமை
என்றாகி விட்டது!

ஆகையால்...
மாற்றம் என்பது
செய்யும் அவலங்களில்
தெரிய வேண்டாம்...
செய்யும் அலுவல்களில்
தெரியட்டும்!

பெ.கருணைவள்ளல், சென்னை.




















கண்ணே உன் காதோர கம்மல்
என்னை கவிபாட சொல்லுதம்மா
பெண்ணே உன் விழி பேசும் மொழியின்
மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா
மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
புன்னகையின் புது வெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே
கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
கொஞ்சி மகிழ்ந்திட தந்தாயே – திரை கூப்பி வெண்
பஞ்சாய் தலை நரைக்கும் காலத்திலும்
நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே
வேலைமுடித்து நான் கலைத்து வரும்
வேளையிலே கோலமயிலே நீ என்
கலைப்பு தீர அன்பு நீர் குவளை தனை ஆசையோடு
வளைகரங்களில் தாங்கி வந்து தருவாயே
கவலை மறந்து சிரித்திருப்போம்
கதைகள் பல பேசி மகிழ்ந்திருப்போம்
கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்
முல்லை மல்லிகை மலர்களைப் போல
வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
தில்லையாண்டவன் துணையோடு நாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக