வியாழன், 17 மே, 2018

ஒரு தாயின் புலம்பல்!





   தாலாட்டு பாடி
உன்னை துாங்க வைத்த வாய் 
இன்று
தானாய் புலம்புகிறது!

சொன்ன கதையையே
தினமும் சொல்லச் சொல்லி
கேட்ட உனக்கு
சொன்னதையே திரும்ப ஒரு முறை
சொல்லும் என் பேச்சு
எரிச்சலுாட்டுகிறது!

ஒரு வேளை உணவுண்ண
பல மணி நேரம் உணவூட்டிய நான்
ஒரு கவளம் உணவை வாயருகே
கொண்டு செல்ல
கை நடுங்கி சிதறுகிறேன்...
காணும் நீ அருவருக்கிறாய்!

நோயுற்ற போது, உன்னை
தோளிலும், மார்பிலும் கிடத்தி
துாங்காமல் கழிந்தன இரவுகள்...
இன்றோ, நோயுற்ற நிலையில்
இரவுகளை கழிக்கிறேன் துாங்காமல்
துணையற்ற நிலையில்!

அருகில் நீ வந்து
அன்புடன் பேச ஏங்குகிறேன்...
ஆனால்
அவசரமான உன் உலகிலே
அது அரிதாகி போனது!

கட்டிலோடு கட்டிலாய்
கனவுகளிலே
உன்னை
குழந்தையாய் தாலாட்டி
வளர்க்கிறேன் கண்ணே!

வேலை சுமையாய் அழுந்த
அன்றாட வாழ்க்கையே
அல்லாடும் வாழ்க்கையாய்
அவதியில் நீ வாழ்கிறாய்...
அதில் நானும்
ஒரு சுமையாய் உனக்கு!

காலன் வந்து அழைக்கும்போது
கடமைகள் அனைத்தையும் புறந்தள்ளி
கண்ணே...
நீ கருமம் செய்ய
வருவாய் என
காத்திருக்கிறேன் மகனே!
- தி.வள்ளி, திருநெல்வேலி.


ஒரு தாயின் புலம்பல்!

அன்பு மகனே...
தாய்மைப் பேற்றுக்காக
நான் தவமிருந்த
தருணங்களை
எண்ணிப் பார்க்கிறேன்!

நீ
கருவில் வளர்ந்த காலத்தில்
கண்டதை உண்ணாமல்
கண்டதை காணாமல்
உணவுப் பத்தியத்தோடு
உணர்வு பத்தியமும் இருந்தேன்!

உன்னை குழந்தையாக
பிரசவித்தபோது
என்னை தாயாக
பிரசவித்துக் கொண்டேன்!

உனக்கு அமுதுாட்டும்
அந்த தருணங்களில்
எனக்குள் அபிஷேகம் நடந்த
அதிசயம் கண்டேன்!

நீ உதிர்த்த மழலை மொழிக்கு
புது அகராதி தயாரித்தேன்
நீ உதிர்த்த உணவில்
புதிய ருசி கண்டேன்!

ஆனால், மகனே...
கோவிலுக்கு போகத்தானே
கூட்டிக் கொண்டு போனாய்
கூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னை
தொலைத்து விட்டுப் போனாய்?

கர்ப்ப கிரகத்தில் நின்று
கடவுளை கும்பிட்ட நீ
கர்ப்பத்தில் உன்னை சுமந்த
என்னை எப்படி மறந்தாய்?

அனாதை இல்லத்தில் இங்கு
அத்தனையும் கிடைக்கிறது
ஆனாலும், உன்னை பார்க்கும்
ஆவல் மட்டும் தகிக்கிறது...
என்றாவது ஒருநாள்
என்னை பார்க்க
வருவாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக