வெள்ளி, 19 மே, 2017

தாய்




                                தாய்


  ரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே...

ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய்!

என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய்!

உன் உலகையோ
என்னை சுற்றி
அமைத்துக் கொண்டாய்!

வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய்!

நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல...
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய்!

கருவறையில்
மட்டுமல்ல
நான் வளரும் போதே
உன் ரத்தம் குடித்து தான்
வளர்ந்தேன்!

மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு அடையாளம்
காட்டியவளே...
இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை
செல்லாய் அரித்து
செல்லாக்காசாய்
படுக்கையில்
குழந்தையைப் போல்
கிடத்தியுள்ளது!

எனக்காக
சுயம் மறந்து
தொலைந்து, கரைந்து
போனவளே...

எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும் பாக்கியத்தை தவிர
வேறு என்ன பிராயசித்தம்
உனக்கு நான்
செய்து விட முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக