ஞாயிறு, 27 மே, 2018

அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே




                                      அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே


கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக்  காட்டுகின்றாய்
என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
மாலையிட்ட  மணாளனை கண்டவுடன்  உனக்கு
மனதிலே பலவற்றை நினைவூட்டும் உனக்கு !

ஆசைக்கு ஒன்று,  ஆஸ்திக்கு  ஒன்று பெற்றோம்
கொஞ்சி மகிழ்ந்திட,  இதுவே நம்முலகம் என்றோம்
வேலைமுடித்து வரும்போது  களைப்பு தீர தாகம் தீர்த்து,
வளைக்  கரங்களில் நீ தரும் நண்ணிரே என் பசி தீரும் !

வேலை  செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததை பகிர்வேன்
அதனை வேடிக்கையாய் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
என்றும் நமது உள்ளமே, பொங்கும் பலவண்ணம் அறிந்தோம் !

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, வாழ்வு கெட்டுப்போவதில்லை
என்றும் நம்மிடம் பிரிவில்லை வாழ்க்கையில் ஒன்றானபின்னே
ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்

நான் சின்னப்பெண்  என நினைக்கும் போதினிலே
என் எண்ணம்  என்றும் ஈடேறும் போதினிலே
உன் முகச்சிரிப்பினிலே என்  மனதினிலே
கண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே !




மாற்றம் என்பது...







மாற்றம் என்பது...

முகஸ்துதி செய்வதும்
முழங்காலிட்டு
மண்டியிடுவதும் தான்
இன்று
முதல் மரியாதை
என்றாகி விட்டது!

சொத்துகளை மதிப்பிட்டு
சொந்தங்களை
தீர்மானிப்பது தான்
இன்று, 'சுற்றுச்சூழல்'
என்றாகி விட்டது!

மற்ற வாத நோய்களை விட
மதவாத நோயாளிகளே
மண்டிக்கிடப்பது தான்
இன்று
மதசார்பின்மை
என்றாகி விட்டது!

கை நிறைய சம்பளம்
வாங்கினாலும்
கையூட்டு வாங்குவது தான்
இன்று
கலாசாரம்
என்றாகி விட்டது!

வித்துக்களை வைத்து
விளை நிலங்களை
தீர்மானிப்பது தான்
இன்று
விவசாயப் புரட்சி
என்றாகி விட்டது!

மணல் அள்ளி
மாபியாக்கள் ஆவதுதான்
இன்று
மகத்தான புரட்சி
என்றாகி விட்டது!

குடி கொடுத்து
குடி கெடுத்து
கோலோச்சி வருவது தான்
இன்று
குடிமக்கள் அரசு
என்றாகி விட்டது!

இலவசம் கொடுத்து
எதையும் சாதிக்கலாம்
என்பது தான்
இன்று
எழுதாத விதி
என்றாகி விட்டது!

வாங்கிய பணத்துக்கு
வாக்கைச் செலுத்துவது
என்பது தான்
இன்று
வாக்குத் தவறாமை
என்றாகி விட்டது!

ஆகையால்...
மாற்றம் என்பது
செய்யும் அவலங்களில்
தெரிய வேண்டாம்...
செய்யும் அலுவல்களில்
தெரியட்டும்!

பெ.கருணைவள்ளல், சென்னை.




















கண்ணே உன் காதோர கம்மல்
என்னை கவிபாட சொல்லுதம்மா
பெண்ணே உன் விழி பேசும் மொழியின்
மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா
மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
புன்னகையின் புது வெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே
கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
கொஞ்சி மகிழ்ந்திட தந்தாயே – திரை கூப்பி வெண்
பஞ்சாய் தலை நரைக்கும் காலத்திலும்
நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே
வேலைமுடித்து நான் கலைத்து வரும்
வேளையிலே கோலமயிலே நீ என்
கலைப்பு தீர அன்பு நீர் குவளை தனை ஆசையோடு
வளைகரங்களில் தாங்கி வந்து தருவாயே
கவலை மறந்து சிரித்திருப்போம்
கதைகள் பல பேசி மகிழ்ந்திருப்போம்
கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்
முல்லை மல்லிகை மலர்களைப் போல
வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
தில்லையாண்டவன் துணையோடு நாம்.


புதன், 23 மே, 2018

ஏன் இந்த கொடுமை




                                                    ஏன் இந்த கொடுமை 


   முத்துக்குளிக்கும்  ஊரில் ஓர்  கொடுமை நடந்தேறியதே 
  அப்பாவி  மக்களை காவல் துறை கொன்று குவித்ததே 
   அரசின் பயங்கர வாதத்தை எதிர்க்க துணிவு இல்லையே 
   மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக அரசா தெரியவில்லையே !

  இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினால் மட்டும் போதுமா 
  வேலையும் தருவதாக போக்கு காட்டுவதும் நியாயமாகுமா 
 யூனியன் கார்பைட் போல் இங்கும் ஸ்டெரிலைட் செயல்படுகின்றதே 
 சுற்றுபுற சூழலை மாசு படுத்தி மக்கள் உயிரை வாங்குதே!

 மக்கள் துன்பத்தை போக்காமல், அழிவிற்கு துணை போகிறதே 
 துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி செயல் படுதே 
அரசு ஆணை இன்றி துப்பாக்கிச் சூடு  நடத்தமுடியுமா !
 கல்செஞ்சு கொண்டவர்கள், தன்னை ஹிட்லர் என நினைக்கலாமா !

அன்று ஜாலியன் வாலாபாக்ஹ் படுகொலை நடந்தேறியதே !
சுதந்திரம் பெற்ற பின்பும் ஜனநாயகப்படுகொலை நடக்கின்றதே 
மக்கள் உயிரை துச்சமாக  மதித்து  அரசு ஆட்சி செய்யுதே 
பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத அரசாக நிலவுதே ! 

பாட்டாளிகளையும், மக்களையும் துன்புறுத்தி  அடக்குவதா 
அவர்களின் போராட்டம் நியாயம் என் தெரியாமல் ஒடுக்குவதா 
மின்னல் போல் பளிச்சென்று வந்து உண்மையை உணர்த்துங்கள்
போராட்டம் எனும் புரட்சியில் இறங்கி வெற்றி பெற்றிடுங்கள் !


ரா.பார்த்தசாரதி  

சனி, 19 மே, 2018

Paatali Makkal




 பாட்டாளி மக்கள்

நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும்  மிக கஷ்டம்
 நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்ற கூட்டம்

உழைத்தால்தான் ஊதியம்  பெறமுடியும்
உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்றான்

படித்தவன்  கணினியில் வேலை செய்து
இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்.

அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்
உடல் உழைப்பை கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு

இமயமலைப் பனி மலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து நிறுத்தும்
 பட்டாளத்து பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்

நம் பசியை தீர்க்கும்  விவசாயும் ஒரு பாட்டாளிதான்
அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான் !

உழைக்கும் கரங்களே, உரிமைக்கு குரல் கொடுங்கள்
அடக்குவோரை எதிர்த்து நின்று வெற்றி வாகை  சூடுங்கள் ~


ரா.பார்த்தசாரதி