விடியலிலே துயிலெழுந்து சடுதியில் நீராடிக்
கடையினிலே வாங்கிவந்த புத்தாடை உடுத்துப்
படையலிட்ட பண்ணியத்தைப் பக்குவமாய்த் தின்னக்
கிடைத்திடுமே இன்பமது இனிதாக நமக்கு!
படபடவென் றேவெடிக்கும் பட்டாசைக் கண்டால்
கிடுகிடுவென் றேமகிழ்ச்சி மனவானில் ஏறும்!
விடுவிடுவென் றேயதனை வாசலிலே வைத்து
வெடித்திடவே உள்ளமதில் உற்சாகம் ஊறும்!
நரகனவன் மரணித்த நன்னாள் இந்நாளில்
சரவெடிகள் வெடித்திடுதல் மட்டும் போதாது!
மதவாதம் இனவாதம் பிடிவாதம் தவிர்த்தே
இதமான மொழிபேசி இணக்கமொடு வாழ்வோம்!
நாம்பெற்ற நன்மைதனை நானிலமும் காணக்
கூம்பாத உளம்கொண்டு ஈகைசெயல் வேண்டும்!
தாம்வாழ வழியற்று மனம்வாடு வோரைத்
தேம்பாது காத்திடுதல் செல்வத்துப் பயனே!
அண்டைஅயல் வீட்டிலுள்ளோர் நல்லுறவைப் பேணப்
பண்டிகைகள் நல்லதொரு வாய்ப்பெனவே கொள்வோம்!
தொண்டுள்ளம் கொண்டஉயர் மாந்தருமே அன்பாய்
உண்டிகொடுத் தேழைகள்தம் பசிப்பிணியைக் கொல்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக